ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்(Video)
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது, கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (21.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இதுவரை காலமும் நீதி அமைச்சர் கூறி வருகின்றார். எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.
ஐ.நாவில் அறிக்கை சமர்பிப்பு
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும், பிள்ளைகளுமே எமக்கு வேண்டும் என பல வருடங்களாக போராடி வருகின்றோம். அரசாங்கத்திடம் பல தடவைகள் கதைத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இழப்பீட்டை வழங்கி எங்களை திசை திருப்ப பார்க்கின்றார்கள். இங்கே ஒன்றும் நடக்கவில்லை என்று காட்டும் வகையிலும் ஐ.நாவிற்கு தமது அறிக்கைகளை வழங்க காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு இழப்பீடு வழங்க முயற்சிக்கின்றனர்.
நாங்கள் இழப்பீட்டிற்காக இவ்வளவு காலமும் போராடவில்லை.
எமது உறவுகளுக்காகவும், அத்தனை உயிர்களுக்காகவுமே நாங்கள் போராடி வருகின்றோம். எமது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் என்ன நடந்தது என்று முதலில் கூறுங்கள்.
அரசாங்கத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளையும், உறவுகளையுமே நாங்கள் கேட்கின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்றே கடந்த 15 வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
எமது உறவுகளை திருப்பி தாருங்கள் என்று கேட்கின்றோம். ஆனால் அதை பற்றி கதைக்கிறார்கள் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (ஓ.எம்.பி) பற்றி கதைக்கிறார்கள், நட்டஈடு பற்றி கதைக்கிறார்கள். மரண சான்றிதழ் வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் எதையும் கேட்கவில்லை.
எனது உறவுகளையும் பிள்ளைகளையுமே கேட்கின்றோம். சுமார் 2200 நாட்களாக மழைக்கும், வெயிலுக்கும் இடையில் நின்று போராடி வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 148 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கை
இவ்வாறான சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நட்டயீடு தருவதாக கூறுகிறார்கள்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.
எங்களுக்கு நட்டயீடு தர நீதி அமைச்சருக்கு என்ன அருகதை உள்ளது?, நீதியமைச்சர் மன்னார் பக்கம் வராமல் இருப்பது அவருக்கு நல்லது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது.
காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நட்டயீடு
கண் துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
எங்களினால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
சுமார் 2 ஆயிரம் நாட்களாக போராடுகின்ற எமக்கு அதை செய்ய முடியாது என்று
நினைக்கிறீர்களா? எனவே இனி வரும் காலங்களில் நட்டஈடு வழங்குவதாக கூறுவதை
நிறுத்துங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.