ஓமிக்றோனும் சுவிற்சர்லாந்தும்
கடந்த 30.11.2021 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு விரைந்த கலந்துரையாடலை மாநிலங்களின் நலவாழ்வு அமைச்சர்களுடனும், நல்வாழ்வுத்துறைசார் (சுகாதாரத்துறை) செயலர்களுடனும் ஆழமாக நாடாத்தியிருந்தது. இக்கலந்தாய்வு 01.12.21 புதன்கிழமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
03.11.2021 முதல் சுவிற்சர்லாந்து புதியவகை மகுடநுண்ணியையும் எதிர்கொள்வதற்கான தமது அறிவிப்பனை வெளியிட உள்ளது. இதன்படி வெள்ளி அறிவிக்கப்படும் நடவடிக்கைகள் திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு நடைமுறைகள் பெரும்பாலும் 24.01.2022 வரை கடைப்பிடிக்க வேண்டி இருக்குமாம்.
டெல்ரா (Delta) மற்றும் ஓமிக்றோன் (Omikron)
இந்தியாவில் தோற்றம்பெற்ற டெல்ரா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தோற்றம் பெற்ற ஓமிக்றோன் வகை மகுட நுண்ணிகள் பரவலைத் தடுப்பதற்காகவே புதிய நடவடிக்கைகள் சுவிற்சர்லாந்து அரசினால் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளை சுவிஸ் அரசு 03. 12. 21 அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிற்சர்லாந்தின் எல்லைகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டு, தடுப்பூசி சான்று சோதனை அதிகப்படுத்தப்படும்.
உள்ளரங்குகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் விளையாட்டு நிகழ்வுகள் உட்பட தடுப்பூசிச் சான்று கட்டாயமாக்கப்படும்.
30 ஆட்கள்வரை சான்றிதழ் இல்லாமல் ஒன்றுகூடலாம் எனும் விலக்கு நீக்கப்படும்.
11 ஆட்களுக்கு மேலாக ஓரிடத்தில் ஒன்றாக ஒன்றுகூடுவதானால் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டும்.
வெளியரங்கில் 1000 மக்கள்வரை தடுப்பூசி சான்றுடன் ஒன்றுகூடலாம் என இப்போது இருக்கும் நடைமுறை நீக்கப்பட்டு ஆகக்கூடியது 300 ஆட்கள் மட்டுமே தடுப்பூசி சான்றுடன் கூடலாம் எனும் விதி நடைமுறைப்படுத்தப்படும்.
பொதுப்போக்குவரத்து துறையிலும் மற்றும் பொது இடங்களில் உள்ளரங்குகளில் எப்போதும் முகவுறை அணிய வேண்டும் எனும் கட்டாயம் அறிவிக்கப்படும்.
பண்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறை நிகழ்வுகளில் முகவுறை அணியக்கூடிய வாய்ப்பு குறைந்தால் அவர்கள் வருகை அளிப்போரது தகவலை நிரலில் பதிவுசெய்யும் நடைமுறை அறிவிக்கப்படும்.
தொழில் இடங்களிலும் அனைத்து தொழிலாளர்களும் முகவுறை அணியப் பணிக்கப்படுவர்.
வீடுகளிலிருந்து வேலை செய்ய வாய்ப்புள்ளோர் வீடுகளிலிருந்தபடி பணியாற்ற வேண்டப்படுவர்.
பாடசாலையில் தொடர் மகுடநுண்ணித்தொற்றுச் சோதனைகள் மாணவர்களுக்கு நடாத்தப்படும்.
தொடர்வினைப் பரிசோதனை (பி.சீ.ஆர்) சான்று தற்போது 72 மணிநேரத்திற்குச் செல்லும் என உள்ளது. இதன் செல்லுபடியாகும் காலம் 48 மணிநேரமாகக் குறைக்கப்படும்.
மகுடநுண்ணியும் அதன் பெயர்க்காரணிகளும்
உருமாறிய மகுடநுண்ணி (கோவிட் 19) பல வகைகளைப் பன்னாட்டுச்சபையின் (ஐ.நா) நல்வாழ்வுத்துறை (சுகாதாரத்திணைக்களம்) பல் பெயர்கள் இட்டு அதன் தீவிரத்தன்மையினை பட்டியலிட்டுள்ளது.
700 மேற்பட்ட மகுடநுண்ணி வகைகள் பல் ஆயிரம் ஆண்டுகளாகப் பல விலங்குகளிலும்
பறவைகளிலும் இருந்தபோதும் அவை மனிதர்களுக்குத் தீங்கு அளிக்கவில்லை.
நளித்திங்கள் (நவம்பர்) 2002ல் முதற்தடவையாக பறவையிலிருந்து மனிதனிற்குத்
தொற்றிய நுண்ணுக்கு சார்ஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
மிகுந்த மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் தொற்று நுண்ணி என்பதன் சுருக்கமே (severe acute respiratory syndrome coronavirus type 2) சார்ஸ் எனப்பட்டது.
இதுவே சிலைத்திங்கள் (மார்கழி) 2019 நிறைவில் உருமாறி கொறோனா (coronavirus disease 2019) எனும் பெயருடன் உலகை அச்சுறுத்தும் பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இந்நுண்ணி பார்ப்பதற்கு அரசர்கள் தலையில் சூடும் மகுடம்போல் இருப்பதால் இலத்தீன் மொழியில் மகுடம் எனப்பொருள்படப் பெயர் வைக்கப்பட்டது.
கடந்த காலத்தில் முன்னை நாள் அமெரிக்க அதிபர் டொனால் டிறம்ப் சீனநுண்ணி என அழைத்தார். தீங்கு விளைவிக்கும் நுண்ணிகளுக்கு ஒருநாட்டின் அல்லது ஒரு மொழியில் வேறுபொருள் படும்படி பெயர்கள் வைத்து மொழிக்கோ, சமயத்திற்கோ, நாட்டிற்கோ அல்லது பிற மதிப்பிற்குரிய சொற்கள் தீங்கு படலாகாது எனும் வகையில் பன்னாட்டு சபையின் நல்வாழ்வுத்துறை விஞ்ஞானம் பெயர்களை அறிவித்து வருகின்றது.
கிரேக்க மொழியில்
கிரேக்கத்தில் உள்ள அகர வரிசையினை உருமாறிய மகுட நுண்ணிக்கு ஐ.நா பெயர் சூட்டி வருகிறது.
இதன்படி அல்பா (Alpha பிரித்தானியா, செப்ரெம்பர் 2020), பெற்ரா ( Beta தென்னாப்பிரிக்கா, மே 2020), கம்மா (Gamma பிறசீல், நவம்பர் 2020), டெல்ரா ( Delta இந்தியா, ஒக்டோபர் 2020), ஓமிக்றோன் (Omikron தென்னாப்பிரிக்கா மற்றும் பலநாடுகளில், நவம்பர் 2021), லம்பாடா (Lambada பேரு, டிசம்பர் 2020), மி (My கொலும்பியா, ஜனவரி 2020) எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
சிறிய ஓ (B.1.1.529)
கிரேக்க எழுத்து வரிசையின்படி ஓமிக்றோன் என்.வை அல்லது எக்ஸ்.ஐ எனப் பெயரிடப்படவேண்டும்.
இந்த உருமாறிய மகுடநுண்ணிக்கு என்.வை எனப்பெயரிட்டால் அது அமெரிக்காவின் நீயோரக் நகரை அல்லது புதியது (நியூ New) எனவும் குறிக்கும்.
எக்ஸ்.ஐ. (Ny) எனப்பெயரிட்டால் அதனைச் சேர்த்து வாசிக்கும்போது சீனாவில் மிகவும் அறியப்பட்ட 'ஷி (Xi)" எனும் பெயர் தொனிப்பதாக அமைந்துவிடும்.
தற்போதைய சீன அதிபரின் பெயரும் 'ஷி" ஆகும். ஆகவே இச்சிக்கல்கள் மற்றும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக கிரேக்க எழுத்து வரிசையில் சிறிய ஓ எனப்பெயரிட்டுள்ளார்கள்.
ஓமிக்றோன் வேமாகப் பரவுமா?
இந்த ஓமிக்றோன் ஐரோப்பாவிலும் சடுதியாகப் பரவுமா என முழுமையாகச் சொல்ல முடியாது.
முன்னர் பெற்ரா வகை நுண்ணி தென்னாப்பிரிக்காவில் விரைந்து பரவியிருந்தது, ஐரோப்பாவைப் பெரிதாகத் தாக்கவில்லை. ஆனால் டெல்ரா வகை இந்தியாவில் உருமாறி உலகம் முழுவதும் விரைந்து பரவியிருந்தது.
ஆகவே அரசுகள் அனைத்தும் முழுமையான முடக்கத்தைத் தவிர்த்து இறுக்கமான நடவடிக்கை ஊடாக தொற்றுப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனைகின்றன.
ஓமிக்றோனின் தாக்கம் பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
தொகுப்பு: சிவமகிழி