உகண்டாவில் நிலவி வரும் அரசியல் பதற்றம் : வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்ற ஜனாதிபதி
உகண்டாவில் நிலவி வரும் கடும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி யோவேரி முசெவேனி (Yoweri Museveni) ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார்.
40 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வரும் அவர், ஐந்தாவது தசாப்தத்திலும் தனது ஆட்சியை நீடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இணையச் சேவை துண்டிப்பு
இதுவரை எண்ணப்பட்ட பாதி வாக்குச் சாவடிகளின் முடிவுகளின்படி, 81 வயதான முசெவேனி 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இசைக்கலைஞரான போபி வைன் (Bobi Wine) 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுப் பின்தங்கியுள்ளார்.

தேர்தல் சமயத்தில் நாடு முழுவதும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டதுடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதால் வாக்களிக்கச் செல்ல முடியவில்லை என்றும், தனது முகவர்கள் கடத்தப்பட்டதாகவும் போபி வைன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும், குறிப்பாக முசெவேனியின் கோட்டையான மேற்குப் பகுதிகளில் "பெருமளவிலான வாக்குப்பெட்டி திணிப்பு" (Ballot stuffing) நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு தெரிவித்துள்ளன.
முசெவேனியின் மகனான முஹூசி கைனெருகாபா தலைமையிலான ராணுவம், தேர்தல் பாதுகாப்பில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலம் ஆட்சி
போபி வைனின் வீட்டைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் கைது நடவடிக்கைகளால் தனது ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள போபி வைன், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தலைக்கவசம் மற்றும் குண்டு துளைக்காத ஆடை அணிந்தே பிரசாரம் செய்தார்.

ஜனநாயகத்தை முடக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது என அவர் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இருப்பினும், போபி வைனின் பாதுகாப்பிற்காகவே அவரது வீட்டைச் சுற்றி வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
முசெவேனி மீண்டும் வெற்றி பெற்றால், ஆபிரிக்காவில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தலைவர்களில் ஒருவராக அவர் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |