ஈரானின் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு ஆட்சி விரைவில் வீழும்
ஈரானின் தற்போதைய இஸ்லாமியக் குடியரசு ஆட்சி விரைவில் வீழும் என்று அந்த நாட்டின் முன்னாள் மன்னரின் (ஷா) மகன் ரெசா பஹ்லவி (Reza Pahlavi) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரான அவர், வொஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசியபோது சில முக்கியக் கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்த வேண்டும். இது உயிரிழப்புகளைக் குறைப்பதோடு, ஆட்சி மாற்றத்தையும் எளிதாக்கும் என்று அவர் கூறினார்.
ஈரானியப் பாதுகாப்பு
ஈரானியப் பாதுகாப்புப் படையினரில் ஒரு பகுதியினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மறுத்துவிட்டனர். இதனால், போராட்டத்தை ஒடுக்க ஈரானிய அரசு வெளிநாட்டு கூலிப்படைகளைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ஈரான் விடுதலையானதும் அங்கு திரும்பப்போவதாகவும், மதத்தையும் அரசியலையும் பிரித்து, தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு எதிரான புரட்சியாக வெடித்துள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் தரவுகளின்படி 2,453 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதுடன் 18,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 156 பேரும் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கம் நடவடிக்கை
எனினும் இந்த போராட்டங்களை "கலவரம்" என்று வர்ணித்துள்ள ஈரான் அரசு, இது ஈரானின் எதிரிகளால் தூண்டிவிடப்படுவதாகக் கூறி வருகிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்க இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்தும், கடும் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

"ஈரானை யார் வழிநடத்த வேண்டும் என்பதை அந்த நாட்டு மக்களே முடிவு செய்வார்கள். அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ளவே நான் உதவுகிறேன்," என்று ரெசா பஹ்லவி தனது உரையை நிறைவு செய்தார்.
ரெசா பஹ்லவி என்பவர் 1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்கு முன்பு வரை அந்நாட்டை ஆண்ட கடைசி மன்னரின் மகன் ஆவார்.