இலங்கையில் சினிமா பாணியில் கொல்லப்பட்ட மூதாட்டி - விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் - கொலையாளியின் கொடூரம்
நீர்கொழும்பு, சீதுவையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த வயதான மூதாட்டி சினிமா பாணியில் கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
69 வயதுடைய பெண்ணின் கழுத்தைக் கம்பியால் நெரித்து, அவர் உயிரிழப்பதற்கு முன்னரே பொலித்தீன் பையில் அடைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீட்டிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேக நபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட மூதாட்டி
குறித்த பெண்ணின் வீட்டின் கூரையை பழுது பார்ப்பதற்காக வந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த நபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கொலையில் தேவனெத்தி கர்லி சந்திராவதி என்ற 69 வயதுடைய தாயாரே உயிரிழந்துள்ளார்.
வயோதிப பெண்ணை கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்து பெற்ற பணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்.
மேலும் தனது பிள்ளையின் நோய் ஒன்றுக்கான மருத்துவச் செலவுகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்னர், சந்தேக நபர் பெண்ணின் வீட்டின் கூரையை பழுதுபார்ப்பதற்காக வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்தப் பெண் வீட்டில் தனியாக வசிப்பதையும், அவரிடம் தங்க நகைகள் இருப்பதையும் அவர் தெரிந்து கொண்டுள்ளார்.
தங்க நகைகள்
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர், கம்பியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதன்போது அந்தப் பெண் அலறியுள்ளார்.

அவர் அலறிக்கொண்டிருக்கும் போதே, அவரை உயிருடன் பொலித்தீன் பையொன்றுக்குள் போட்டு அடைத்து, அந்தப் பையை வீட்டின் ஒரு மூலையில் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
உயிருடன் பொலித்தீன் பைக்குள் அடைக்கப்பட்ட அந்தப் பெண் பின்னர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு மின்விளக்குகள் பகல் வேளையிலும் எரிந்துகொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள், அது குறித்து அவரது மகனுக்குத் தெரிவித்துள்ளனர்.
வேறு வீட்டில் வசித்து வந்த மகன், வீட்டிற்கு வந்து சோதனையிட்ட போது, பையொன்றில் அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த தாயின் சடலத்தை கண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் சிசிடிவி கமரா காட்சிகள் மூலம் வீட்டிற்கு வந்த நபரைக் அடையாளம் கண்டுள்ளனர். அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் கொலை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.