அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
புதிய இணைப்பு
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆறு மாவட்டங்களில் உள்ள 16 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)இன்று காலை (22) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
நிலை ஒன்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை இரண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், நிலை மூன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் மண்சரிவு ஏற்படுவதற்குரிய அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறி, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தற்போது நிலவும் கனமழையை கருத்தில்கொண்டு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (22) காலை 6.00 மணி முதல் நாளை (23) மாலை 6.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறுங்கள் - சிவப்பு எச்சரிக்கை
அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவிட்ட மற்றும் இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள இரத்தினபுர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் நிலை “வெளியேறுங்கள்” (சிவப்பு) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவனமாக இருங்கள் - மஞ்சள் எச்சரிக்கை
கொழும்பு மாவட்டத்தில் உள்ள சீத்தாவக்கை மற்றும் பாதுக்க
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அத்தனகல்ல
களுத்துறை மாவட்டத்தில் உள்ள இங்கிரிய மற்றும் புலத்சிங்கல
கேகாலை மாவட்டத்தில் உள்ள ருவன்வெல்ல
இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, குருவிட்ட மற்றும் அயகம ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை “கவனமாக இருங்கள்” (மஞ்சள்) எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
முதல் நிலை எச்சரிக்கை
மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை "கவனமாக இருங்கள்" (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.