வெளிநாட்டில் இருந்து அழைத்த பெண் - இலங்கையில் பெண் உட்பட இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
களுத்துறையில் பரிசு ஒன்றை அனுப்புவதாக கூறி, 65 வயது மூதாட்டி மற்றும் அவரது 16 வயது பேரன் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இருவரையும் ஏமாற்றி 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கணக்கில் வரவு வைத்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்கு களுத்துறை, மெனெரிதென்ன பகுதியை சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
இருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தனது 16 வயது பேரனின் தொலைபேசிக்கு கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

தான் வைத்தியர் எனவும், கணவர் இறந்ததன் பின்னர் சொத்துக்களை மாமனார் பலவந்தமாக பறித்துக்கொள்ள முயல்வதால் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கினை வெல்வதற்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார்.
அத்துடன், பேரனுக்கு பரிசொன்றை அனுப்புவதாகவும் தெரிவித்ததாக வயோதிபெண் பொலிஸாரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கில் வெற்றி பெற்றமைக்கான தகவலுடன் நீதிமன்றத்திற்கு அருகில் எடுத்த புகைப்படமொன்றையும் மோசடி செய்த பெண் அனுப்பியுள்ளார்.
பரிசுப் பெட்டி
பெப்ரவரி 16 ஆம் திகதி கடிகாரம், உடைகள், கையடக்கத் தொலைபேசி, வாசனைத் திரவியம், பாதணிகள், மடிக்கணினி போன்ற பரிசுப் பொருட்களின் புகைப்படங்களையும் அனுப்பியு்ளார்.

17 ஆம் திகதி பரிசுப் பெட்டி தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால் அதற்காக 98 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.
பின்னர் இலங்கையர் ஒருவர் விமான நிலையத்திலிருந்து தொடர்புகொண்டு 98 ஆயிரம் ரூபாவை அனுப்புமாறு கூறி வங்கிக் கணக்கிலக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இதன்போது நாங்கள் அப்பணத்தை அனுப்பினோம். பின்னர் பரிசுப் பெட்டியின் எடை அதிகமாக இருப்பதால் மேலும் 1.5 இலட்சம் ரூபாவை வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளனர்.
இவ்வாறு பல தடவைகள் தொடர்பு கொண்டு 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தாங்கள் இந்தப் பணத்தை அயல் வீட்டு பெண்ணொருவரிடம் வீடொன்றினை விற்றுப் பெற்ற பணமாகும்.
மீண்டும் கடந்த வாரம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கூறியபோது, மேலதிகமாகப் பணம் இல்லை எனக் கூறியதாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.