கோட்டாபய விலகினாலும் பழைய முகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்துள்ளன:நளின் பண்டார
அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு 70 அமைச்சர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான ராஜாங்க அமைச்சர்களை நியதிக்க திட்டமிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மீண்டும் பழைய முகங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன
நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித்த அபேகுணவர்தன போன்றோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளை வழங்குமாறு ஏற்கனவே பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச விலகினாலும் சகல பழைய முகங்கள் மீண்டும் தோன்ற ஆரம்பித்துள்ளன. எரிபொருள் பவனை குறைந்து, வரிசைகள் குறைந்துள்ளதால், பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்
பிரச்சினைகள் முடியவில்லை. நாட்டு மக்கள் பல பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி வாழ்கின்றனர். கடந்த ஜூலை மாதத்துடன் நோக்கும் போது ஜூன் மாதம் பணவீக்கம் 90 வீதமாக அதிகரித்துள்ளது. வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வறுமை மேலும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக கீழ், நடுத்தர வகுப்பு மக்களுக்கு அரச ஊழியர்களுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.
மக்கள் புரதச் சத்துள்ள உணவை பெற்றுக்கொள்ள முடியாது கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விலைகள் அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்வாதாரங்கள் நின்று போயுள்ளன. எனினும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.