தென்பகுதி கடலில் பரவியுள்ள எண்ணெய் தொடர்பில் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவிப்பு
தென்பகுதி கடலில் பரவியுள்ள எண்ணெய் ஆபத்தானவையல்ல என கடலோர பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி, ஹிக்கடுவை மற்றும் பரேலியா கடற்கரைப் பகுதிகளில் பரவி காணப்பட்ட திரவம் ஆபத்தான எண்ணெய் அல்ல அது ஒரு வகை லூப்ரிகேஷன் (இயந்திரங்களுக்கு பயன்படுத்தும்) எண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கும் பணிகள்
இந்த பகுதிகளில் கடற்கரையில் பரவி காணப்பட்ட எண்ணெய் படிமங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் சமந்த குணசேகர இதனை குறிப்பிட்டிருந்தார்.
கடற்கரைக்கு அடித்து வந்த எண்ணெயை அகற்றும் நடவடிக்கை சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பட்டபந்தியின் அறிவுறுத்தலின்படி கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தினால் கடந்த 07ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (09.03.2026) மதியம் வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த எண்ணெய் கறைகள் உருவாகக் காரணமான மூலத்தை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை கண்டறிந்துள்ளது.

அதன்படி கடலில் மிதந்து வந்த எண்ணெய் நிரப்பப்பட்ட பீப்பாய்கள் காரணமாக இந்த பரவல் ஏற்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய் வகை பிஸ்டன் முறையில் இயங்கும் ஏர் கம்ப்ரெசர்களின் உள் பகுதிகளை மென்மையாக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகேஷன் எண்ணெயாகும்.
இது ஆபத்தான அல்லது மிகவும் அபாயகரமான எண்ணெய் வகையாக வகைப்படுத்தப்படாதது என்றும் அவர் கூறினார்.