தியத்தலாவ கார் பந்தய இறப்புக்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு: குற்றம் சாட்டியுள்ள பந்தய கார் ஓட்டுநர்கள்
தியத்தலாவ பொக்ஸ் ஹில் (Fox Hill) நிகழ்வில் ஏற்பட்ட ஏழு பேரின் இறப்புகளுக்கு பந்தய ஏற்பாட்டு அதிகாரிகளே காரணம் என இலங்கையின் பந்தய கார் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்பாட்டாளர்கள் மோசமான தயாரிப்பை மேற்கொண்டிருந்ததோடு அடிப்படை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பந்தயக்கார் ஓட்டுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நிபுணத்துவம் இன்மை
தூசியைத் தடுப்பதற்கும், பார்வைத்திறன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்கும் பாதையில் நீர் பாய்ச்சப்படுவதை உறுதிசெய்யுமாறு தமது உறுப்பினர்கள் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை அதிகாரிகள் புறக்கணித்ததாக இலங்கை பந்தய சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தியத்தலாவ பொக்ஸ் ஹில் சுற்றுவட்டத்தில் இரண்டு கார்கள் பார்வையாளர்கள் மீது மோதியதில் எட்டு வயது சிறுமி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வை நடாத்த நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு இந்த அளவிலான நிகழ்வை நடத்த தேவையான அனுபவமும் நிபுணத்துவமும் இல்லை என்று சங்கம் கூறியுள்ளது.
பதவி விலகல்
மூன்று நிகழ்வுகளுக்கு ஒரு முறையாவது தூசி நிறைந்த அழுக்கு பாதையில் தண்ணீர் ஊற்றுவது வழக்கமான நெறிமுறையாகும்.
ஆனால் போட்டியாளர்களிடமிருந்து பல கோரிக்கைகள் இருந்தபோதிலும் இது பின்பற்றப்படவில்லை என்று பந்தயக்கார் சாரதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த நிகழ்வின் அனைத்து வருமானங்களும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், விளையாட்டின் நிர்வாக அமைப்பான சிறிலங்கா ஒட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ், பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |