ட்ரம்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த செனட் சபையில் அதிரடி தீர்மானம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அந்நாட்டு செனட்சபை ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக வெனிசுவேலா மீது டிரம்பின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் முனைப்புக்களை இரண்டு கட்சிகளும் இணைந்து மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் வெனிசுவேலா மீது கூடுதல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முன், காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தும் இரு கட்சிகளின் ஆதரவுடன் கூடிய தீர்மானம், அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 52 ஆதரவு வாக்குகளும் எதிராக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
ட்ரம்பின் அலட்சியமான போக்கு
அனைத்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரேண்ட் பால், டாட் யங், லிசா முர்கோவ்ஸ்கி, ஜோஷ் ஹாவ்லி மற்றும் சூசன் காலின்ஸ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.
ஜனநாயகக் கட்சி செனட்டர் டிம் கேன் முன்வைத்த இந்த ‘போர் அதிகாரம்’ (War Powers) தீர்மானம், வெனிசுவேலாவை தாக்குவதற்கோ அல்லது அந்நாட்டிற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதற்கோ முன், ஜனாதிபதி டிரம்ப் காங்கிரஸின் அனுமதி பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றது.

கடந்த வார இறுதியில், அமெரிக்க சிறப்பு படையினர் வெனிசுவேலா தலைநகர் கராகாசில் திடீர் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை கைது செய்து நியூயார்க்கிற்கு அழைத்து சென்று போதைப் பொருள் தீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு முன் காங்கிரஸுக்கு தகவல் அளிக்காததற்கான காரணமாக, “காங்கிரஸ் உறுப்பினர்கள் தகவல்களை கசியவிடும் பழக்கம் கொண்டவர்கள்” என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து ஜனநாயகக் கட்சியினரும், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சட்டவிரோதமானது எனவும், அமெரிக்கா நீண்டகால மோதலில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறெனினும் கடந்த காலங்களில் இவ்வாறான செனட் சபை தீர்மானங்கள் போன்ற அணுகுமுறைகள் குறித்து ட்ரம்ப் அலட்சியமான போக்கினை பின்பற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.