குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடியாக கைது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான பரிசோதனையின்றி ஆவணங்களை ஏற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்திற்கு, மற்றொரு நபரின் சுயவிபர தகவல்களை சேர்த்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதனை அவர் முறையாக பரிசோதிக்காமல் ஏற்றுக் கொண்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளார்.
கடவுச்சீட்டு மோசடி
போலி கடவுச்சீட்டு தயாரித்தது தொடர்பான வழக்கு ஒன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதவான் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, கெஹெல்வத்த தினுக என அழைக்கப்படும் ஹெவா பேதிகே தினுக சதுரங்க என்பவரின் புகைப்படத்திற்கு, பதிலாக வேறொரு நபரின் சுயவிவரத் தகவல்களை இணைத்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முறையான பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு அவருக்குக் கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் 45(2)(1) வது பிரிவின் கீழ், குற்றச் செயலுக்கு உதவி மற்றும் உடந்தை வழங்கிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 51 வயதுடையவராவார் என தெரியவந்துள்ளது.
அவர் மாத்தறை, மடிஹ, கனத்தேகொட வீதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.