பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்து! குவியும் சடலங்கள் - நெருக்கடியில் அரசு
உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்து குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 288 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஒடிசா தொடருந்து விபத்தில் சிக்கி இறந்தவர்களில் பலரின் அடையாளங்கள் தெரியாததால், ஏராளமான உடல்கள் மருத்துவமனைகளில் உள்ள பிணவறைகளில் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குவியும் சடலங்கள்
இதன்படி 87 பேரின் உடல்கள் பாலசோரில் இருந்து ஆம்புலன்ஸ் வாயிலாக, தலைநகர் புவனேஷ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 உடல்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், மற்ற உடல்கள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிவதால், உடல்களை பாதுகாக்க போதிய வசதி இல்லாமல் ஒடிசா அரசு திணறி வருவதாக கூறப்படுகின்றது.
தொடருந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தபோது, இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்க போதிய பிணவறைகள் இல்லாதது குறித்து ஒடிசா அரசு சுட்டிக் காட்டியுள்ளது.
இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் பேசிய பிரதமர் மோடி, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதால், அவர்களின் அடையாளங்களை கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.