உலகை உலுக்கிய தொடருந்து விபத்து! உயிரிழப்புக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு(video)
ஒடிசாவில் இடம்பெற்ற கோர தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த கோர விபத்தில் இதுவரை, 275 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து, பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் தொடருந்து, சரக்கு தொடருந்து ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.
உயிரிழந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு
இதன்போது விபத்;jதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. தொடருந்து பெட்டிகளில் பயணிகள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தனர்.
பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப்போராடினர். இதனால் நேரம் செல்லச்செல்ல உயிரிழப்பு அதிகரித்தவண்ணம் இருந்தது.
இன்று மதிய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளதாகவும், 1000இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகின. எனினும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா, ஒடிசா தொடருந்து விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த தரவு மாவட்ட கலெக்டரால் சரிபார்க்கப்பட்டு, பலி எண்ணிக்கை திருத்தப்பட்டது என்றும், சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதால் 288 என்று முதலில் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இறப்பு எண்ணிக்கை 275 ஆக திருத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த தொடருந்து பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இப்போது அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட தொடருந்து சேவையை மீண்டும் வழங்குவதற்காக மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.