நாட்டில் உரிமைகளுடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்
ஒவ்வொரு தனி மனிதனும் பிறக்கும் போதே சகல உரிமைகளுடனும் பிறக்கின்றான். ஆனால் இலங்கையை பொறுத்தமட்டில் மனித உரிமைகள் சில வரையறைகளை கொண்டிருக்கின்றன.சிவில் உரிமைகள்,அரசியல் உரிமைகள்,பொருளாதார உரிமைகள் என பல உரிமைகள் காணப்படுகின்றன.
1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பில் மனித உரிமைகள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதனோடு இணைந்த 1948 டிசம்பர் 10இல் மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது.
மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இருந்தாலும் டல்லின சமூகம் வாழும் நாட்டில் தற்காலத்தில் மாறுபட்ட நிலை காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
பயங்கரவாத தடைச் சட்டம்
எடுத்துக் காட்டாக குறித்த உறுப்புரைகளில் உறுப்புரை 05இல் சித்திரவதைகளில் இருந்து விடுபடுவதற்கான உரிமை, உறுப்புரை 07இல் அனைவரும் சட்டத்தின் முன் சமம், உறுப்புரை 19இல் பேச்சு சதந்திரம் போன்றன காணப்பட்டாலும் சில வேலைகளில் இதனை மீறி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தமிழ் பேசும் மக்களை அவ்வப்போது பொலிஸார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைது, சிறையில் ஏற்படும் உயிரிழப்பு, சித்திரவதைபடுத்தல் போன்றனவும் மனித உரிமைகள் இருக்கின்றதா என்பதை கேள்விக்குறியாக்குகிறது. பயங்கரவாத தடைச் சட்டம்,அவசரகால சட்டம் போன்றன பொது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு தடையாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய உரைகள் இடம் பெற்றாலும் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுகள் இது வரைக்கும் கிடைக்கவில்லை. வடகிழக்கில் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் திகதி அன்று காணாமல் போன உறவுகளால் நீதி கோரிய போராட்டங்கள் இடம் பெற்றன.
வவுனியா, அம்பாறை போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த நாளில் சர்வதேச நீதி விசாரனையை வலியுறுத்தி போராடினார்கள்.இவ்வாறான நிலையில் இது குறித்து சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாதன் தெரிவிக்கையில் "மனித உரிமைகள் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டதாக நான் உணரவில்லை.யுத்தத்திற்கு பின்னர் அரச இயந்திரங்களால் ஏற்படுத்தப்படும் தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தில் குறைவடைந்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் முந்திய அரசாங்கம் என்றும் ஒட்டு மொத்த இலங்கையை வைத்து பார்க்கின்ற போது 2009க்கு பின்னர் முன்னேற்றகரமான விடயமாக இருந்தாலும் வடக்கு கிழக்கில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை அதாவது தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அரச கட்டமைப்புக்களால் இழைக்கப்படுகின்ற பிரச்சினைகளை அறிக்கையிடுகின்ற ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதனை நாங்கள் பார்க்கின்றோம்.
மனித உரிமை கலந்துரையாடல்
தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு பிரிவினாலும் குற்றவியல் திணைக்களத்தினாலும் தொடர்ச்சியாக விசாரணை என்ற பெயரில் அழைப்பதையும் பார்க்கிறோம்.இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் சந்தர்ப்பங்கள் குறைவு இருந்தாலும் அவர்களுக்கு சிக்கல் கொடுத்து அச்சுறுத்தும் விதமாக வாழ்க்கையினை கஷ்டத்துக்குள்ளாக்கி விசாரனை என்ற பேரில் நடந்தேருவதை காண்கிறோம்.
அதே நேரம் மிக சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவரை பயங்கரவாத பிரிவால் அழைக்கப்பட்டிருப்பதென்பது மிகப் பாரதூரமான விடயமாக பார்க்கப்படுகின்றது .இது தொடர்பில் பல ஊடக நிறுவனங்களும் அறிக்கைகளை வெளியிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.இது போன்ற விடயம் ஊடகத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுருக்கமாக கூறுவதானால் பாரியளவில் ஊடகத் துறையில் முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்படுத்தப்படவில்லை.இந்த அரசாங்கம் ஊடக துறையில் வெளிப்படைத் தன்மை ,பொறுப்புக்கூறல் போன்றவற்றை வைத்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தாலும் சில ஊடக நேர்காணல்களில் அல்லது கலந்துரையாடல்களில் சில விபரங்களை கேட்ட போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அசமந்த போக்கு காணப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் தகவல்களை போட்டு தான் பெறலாம் என்பது இல்லை.இதன் உண்மையை பார்த்தால் அரச நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அடிப்படை கோட்பாடு அதை செய்யாமல் பொறுப்புக்கூறல், வெளிப்படைத் தன்மை என்று மிகவும் அதிகளவில் கதைக்கும் அரசாங்கம் சில முக்கிய விடயங்களை கேட்கின்ற போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பின் ஒழிப்பதும் அதிலும் ஊடகங்கள் கேட்கின்ற கேள்விகளை ஒழிப்பது ஊடகத் துறையில் பாரியளவு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
அமைச்சர்கள் இப்படி சொல்கின்ற போது அரச நிறுவனங்கள் எந்தளவுக்கு சுயாதீனமாக,சுதந்திரமாக தாங்களாக முன்வருவார்களா என்ற கேள்வி வருகிறது. பயங்கரவாத தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டம் செய்த ,ஊர்வலங்கள் செய்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் அது தொடர்பான சட்டங்கள் நீக்கப்படும் என கூறியும் ஒரு வருடம் கடந்தும் எதுவும் நடைபெறவில்லை.
நீக்குவது பற்றிய குழு ஒன்றை அமைத்தும் புதிய சட்ட மூல வரைபினை ஏற்படுத்துவது பற்றியும் ஈடுபடுவதாக சொல்கிறார்கள்.ஓகஸ்ட் மாதத்தில் இடம் பெற்ற மனித உரிமை கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நீக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
தற்போதைய அரசாங்கம்
இன்று வரை அது நீக்கப்படவில்லை புதிய சட்ட வரைவு சமர்ப்பணங்களை நீதியமைச்சுக்கு மேற்கொண்டு பெரும் அளவான சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் கூட இந்த நீதியமைச்சின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு அதாவது இரண்டாவது வரைவு தயார் நிலையில் இருக்கின்றது என்றும் இது வரைக்கும் பொது மக்களின் பார்வைக்கு குறித்த வரைவு சமர்ப்பிக்கப்படவில்லை.
ஆகவே பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலும் எவ்விதமான முன்னேற்றங்களும் இடம் பெறவில்லை.தடுப்பு காவல் உயிரிழப்பு என்பது இலங்கையில் சாதாரணமாக மாறிவிட்டது என்ற நிலைதான் காணப்படுகிறது.

இது போன்று அதையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது முந்தைய தற்போதை அரசாங்கங்களுக்கிடையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. அது சம்மந்தமான புதிய அணுகுமுறைகளையும் தற்போதைய அரசாங்கம் கூட முன்னெடுப்பதாக தெரியவில்லை.
அதே பொறிமுறையினை காவல் துறை முன்னெடுத்து வருகின்றது.தடுப்புக் காவலில் உயிரிழந்தவர் தற்கொலை செய்ததாகவும் அல்லது முன்னர் சுகயீனமுற்றிருந்ததாகவும் ,தப்பி செல்லமுற்பட்ட போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அல்லது பொலிசாரை தாக்க சென்ற போது சுட்டு கொலை செய்யப்பட்டார் போன்ற அதே காரணங்களை திரும்பவும் சொல்லி சொல்லி உயிரிழப்பு ஏற்படுகிறது.
பொலிஸாரினால் பொது மக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவே கூறப்படுகிறது. இதனை மாற்ற வேண்டும். இது தொடர்பிலும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்பட்டதாக தெரியவில்லை.சட்டங்கள் சரியாக நடை முறைப்படுத்தப்பட்டு அதற்கான அணுகுமுறைகள் மாற்றப்படுவது மிக முக்கியம்.
இதனுடன் பயங்கரவாத சட்டம் தொடர்புபட்டுள்ளது. நீதித் துறையின் கண்காணிப்பு இங்கு குறைவாகவுள்ளது இதனால் இச் சட்டம் நீக்குவது பற்றி கூறப்படுகிறது.
அது போன்று அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் தேவை நியாயப்படுத்தவில்லை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றில் உரையாற்றினர்.இதன் அழுத்தமே அநுர குமார இதனை செய்தாரா...இயற்கை இடர் தொடர்பான சட்டங்கள் இருந்தபோதிலும் இச் சட்டம் தேவையா என்பது பற்றி மனித உரிமைகள் செயற்பாட்டாளரால் கேள்வி எழுப்பப்ட்டிருத்து .அதிலும் பிரகடன ஒழுக்கு விதி முறைகள் உள்ளது.
ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரத்தை அடக்கவே இது பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. கருத்து வெளியிடும் சுதந்திரம் ,ஊடக அடக்கு முறையும் இதனோடு இருப்பதை காணக்கூடியதாக உள்ளது என்றார்.
சர்வதேச நீதி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எமது உறவுகள் எங்கே எனவும் அரசியல் கைதிகளுக்காக விடுதலையை வலியுறுத்தியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பல வாசகங்களை ஏந்தியவாறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் இது குறித்து கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் திருகோணமலை மாவட்ட தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் " எங்கள் உணர்வுகளையும் உரிமைகளையும் ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற எந்த அரசாங்கமும் மதிப்பதில்லை.
இதனால் சர்வதேசமே நீதியை பெற்றுத்தரவேண்டும். உள்நாட்டுப் பொறி முறை மீது எமக்கு நம்பிக்கை இல்லை சர்வதேச பொறி முறை ஊடாக நீதியை நிலை நாட்டுங்கள்.

காணாமல் போன எங்கள் உறவுகள் எங்கே. எமது குரலை பொருட்படுத்தாமல் செம்மணி மனித புதை குழிக்கான காரணங்களை கண்டறியவும் உண்மையை நிலைநாட்டவும் ஆளும் அரசாங்கம் முன்வர வேண்டும். போராடி போராடி கண்ணீர் வடித்து பல தாய்மார்கள் உயிரிழந்துள்ளோம். மனித உரிமைகள் தினம் என்பது வெறும் பெயரளவில் மாத்திரமே உள்ளது. நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இவர் போன்ற தாய் தனது மகனை தேடி பல வருடங்களாக அலைந்து வருகிறார். இராணுவமே தனது மகனை கடத்திச் சென்றதாக அழுத கண்ணீருடன் கூறியிருந்தார். கிழக்கில் காணாமல் போன உறவுகளுக்கான சங்கம் ஊடாக பலர் இணைந்து தொடர்ந்தும் போராடியும் வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் காணி அபகரிப்பு, புத்தர் சிலை நிறுவுதல் போன்றன உரிமைகளை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
குறிப்பாக யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமைகளுக்கு நியாயமான விசாரனை தேவை, காணாணல் போனோர், யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டோர், ஊடக சுதந்திரம், அநியாயமான பயங்கரவாத தடை சட்ட கைது, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றன தற்காலத்தில் ஒட்டுமொத்த உரிமைகளை மனித உரிமைகளுக்கான தீர்வாக காண்பதில் இழுபறி நிலையில் உள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய விடயங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன இதனால் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இனவாதத்திற்கு இடமில்லை இனவாதங்களை தூண்டுவோர் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என கூறினாலும் தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவி இனவாத கருத்துக்களை பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? இவ்வாறான நிலையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் நிலை இல்லாமல் இருக்கிறது.
கடுமையான நடவடிக்கை
இது குறித்து திருகோணமலையை சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் த.கிரிசாந் தெரிவிக்கையில் "கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை போதைப்பொருளற்ற எல்லோருக்கும் பொதுவான வழங்கும் நோக்கில் செயற்பட்டாலும் மனித உரிமை மீறல்கள் என்ற விடயம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கடந்த கால ஆட்சியாளர்களை போலவே தற்போதுள்ளவர்களும் நடந்து கொள்கின்றனர். குறிப்பாக இலங்கையில் எண்ணிக்கையில் குறைவான தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆங்காங்கே தொடர்ந்து வருகின்றன.

அண்மையில் திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் உருவான விகாரை சிறந்த உதாரணமாகும். இந்த விடயத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.
நீதிப் பொறிமுறை பக்கச் சார்பாக செயற்பட்டது. இது போன்று திருகோணமலை முத்துநகர் மக்களின் காணி அபகரிப்பும் இலங்கையில் வாழும் எண்ணிக்கையில் குறைவான மக்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு சிறந்த சான்றுகளாக அமைகின்றன.
இவ்வாறு சட்ட விரோதமாக செயற்படும் துறவிகள் இன்றுவரை எந்தவொரு தண்டனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. மட்டக்களப்பில் மக்களை வெட்டி எறிவேன் என அச்சுறுத்திய தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் இன்று வரை கைது செய்யப்படவில்லை. மாறாக சிறு குற்றங்களை செய்யும் தமிழ் பேசும் இளைஞர்கள் இருவர் கைதாகி இறந்த இரண்டு சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளன.
எனவே இலங்கையைப் பொறுத்தவரை அரசு மற்றும் அரச திணைக்களங்களான பொலிஸ், தொல்லியல் திணைக்களம், துறைமுக அதிகார சபை போன்றன பாராபட்சமான முறையில் செயற்பட்டு வருவதுடன் மனித உரிமை மீறல்கள் பலவற்றில் ஈடுபட்ட வண்ணமே உள்ளன.
எனவே மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு எமது நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மை என மார் தட்டிக் கொள்ளும் தனிமனிதர்கள் மற்றும் அதிகாரிகளின் மனதளவில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றமாக அமைகிறது எனவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக ஊடக சுதந்திரம் பறிக்கட்பட்டு ஊடகவியலாளர்கள் கூட பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
முல்லைத்தீவில் புகைப்பட ஊடகவியலாளர்,திருகோணமலையில் இளம் ஊடகவியலாளர் என அண்மைய சம்பவங்கள் மனித உரிமைகள் விடயத்தில் கேள்விக்குறியாக்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட சகோதரர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முடியாது கருத்து சுதந்திரப் பறிக்கப்படுவதுள் அரசியல் கைதிகளை சிறையில் சந்திப்பதற்கு கூட பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.
பல வருடங்கள் கடந்தும் விடுதலை என்பது நினைத்து பார்க்க முடியாதுள்ளது. சிறையில் இறந்து போன வரலாறுகளும் உண்டு அத்தனையை சம்பவங்களும் மனித உரிமைகள் இந்த நாட்டில் இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது என்ற முடிவுக்கு வரலாம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 13 December, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.