நுவரெலியாவில் மலசல கூட கழிவு நீரால் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்கும் மக்கள்
நுவரெலியா பிரதேச செயலகத்தில் உள்ள பொது மலசலக் கூடத்தின் அருகில் உள்ள கால்வாய்களில் கழிவு நீர், குளம் போன்று தேங்கி நிற்பதால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வருபவர்களுக்கும், விண்ணப்பித்தும் இதுவரையில் கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களுக்கும் அவரச அறிவிப்பு ஒன்று வெளியீடப்பட்டுள்ளது.
அத்துடன், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாகவும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
கழிவு நீரால் அசௌகரியம்
குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதிகளில் வாழும் மக்கள் காலை முதல் மாலை வரை நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், பிரதேச செயலகம் முன்பாக உள்ள மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் கல்வாயில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகின்றதாகவும், இதனால் அங்கு வருபவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
அதுமட்டுமன்றி, நுவரெலியாவில் அடிக்கடி பெய்து வரும் மழை நீரும், கழிவு நீரும் கலந்து குறித்த கால்வாயில் நிரந்தரமாக தேங்கி கிடக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அஸ்வெசுமவிற்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்திற்காக நுவரெலியா பிரதேச செயலகத்தினை நாடி வரும் பொது மக்களின் நலன் கருதி, இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரிசையில் காத்திருக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


