நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் நேற்று (06) மாலை நேர புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி 2112 குடும்பங்களைச் சேர்ந்த 8191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதும் தொடர்ச்சியான மழை
பாதிப்புகள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 152 குடும்பங்களைச் சேர்ந்த 504 நபர்கள் இன்னும் 18 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதில் 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெள்ளம் நுவரெலியா மாவட்டத்தில் பெரும் பகுதியைச் சூறையாடி பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போதும் தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருக்கின்ற நிலைமையில் தொடர்ந்து அதிகளவிலான பாதிப்பை நுவரெலியா மாவட்டம் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.