பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு பெற்றுக்கொடுக்க திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை போசாக்கான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் ஊடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் போசாக்கினை உறுதி செய்தல்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டினால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளமையால் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் போசாக்கினை உறுதி செய்யும் வகையில் ஒரு வேளை போசாக்கான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக விவசாயத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன ஒன்றினைந்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
ஊட்டச்சத்துடனான சோறு உணவு வேளை
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் இரும்பு சத்து, விட்டமின்கள் அடங்கிய சோறு உணவு வேளை ஒன்று வழங்கப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக ஒரு நாளைக்கு 82 மெற்றிக்தொன் அரிசி தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த அரிசி தொகையை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு விவசாயத்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.