நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தாதியர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய இணைப்பு
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்கப்பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
உரிய நடவடிக்கை
இதன்போது, தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு, ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, அரசாங்காம் இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடத்த அரசாங்க தாதியர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
கிளிநொச்சி
வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடுபூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை,நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய நோயாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சில தாதியர்கள் எதிர்ப்பினை முன்னெடுத்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை குறித்த போராட்டமானது வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாது எனவும் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடி
2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று (27) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு எதுவித பாதிப்புமின்றி தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிந்தது.
இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மேலதிக நேர வரம்பு பிரச்சினையை முன்வைத்து இன்று கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவும் தெரிவித்திருந்தார்.
நுவரெலியா
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் ,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்று வைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று(27) பகல் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் தற்போது முன்மொழியப்பட்டு வாதிடப்பட்டு வரும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தன்னிச்சையாக கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாகை
இந்தநிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களினால் இன்று நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை மதிய உணவு வேளையில் போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மருந்து தட்டுப்பாடு
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும், சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையினை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும்.
இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும். மேலும் வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும், கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டமானது இன்று (27) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கோரிக்கை
அத்துடன், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்று தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

