யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்!
புதிய இணைப்பு
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தாதியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,தாதியர்களின் பதவி உயர்வு காலம் நீடிக்கப்பட்டுள்ளமை சுகாதார ஊழியர்களை முழுமையான பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (27) போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
உரிய நடவடிக்கை
இதன்போது, தாதியர்கள் தாதியர்களுக்கு பாதீட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு, குறைக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரி, பதவி உயர்வை பழைய முறைப்படி வழங்கு, ஆகிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, அரசாங்காம் இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடத்த அரசாங்க தாதியர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
கிளிநொச்சி
வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து நாடுபூராகவும் தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டமானது இன்று (27) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கோரிக்கை
அத்துடன், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதென்று தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

