பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்
உலகளவில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அதிகரித்து வருவதாக யுனெஸ்கோ (UNESCO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை எச்சரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 27.3 கோடி (273 million) குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முறையான கல்வி வசதியின்றி உள்ளனர்.
கடந்த 2024 அக்டோபரில் கணிக்கப்பட்ட 25.1 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 2.2 கோடி அதிகரிப்பைக் காட்டுகிறது.
கல்வி வசதிகள்
மக்கள் தொகை வளர்ச்சி, பல்வேறு நாடுகளில் நிலவும் போர்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவையே இந்த அபாயகரமான உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

குறிப்பாக சப்-சஹாரா ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை வேகத்திற்கு ஏற்ப கல்வி வசதிகள் மேம்படாததால் அங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் பெண்களுக்கான கல்வித் தடைகளும் இந்த எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது.
நிதி ஒதுக்கீடு
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமை மற்றும் வறுமை காரணமாக பல ஏழை நாடுகளில் 36% மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாத நிலையில், பணக்கார நாடுகளில் இது வெறும் 3% ஆக மட்டுமே உள்ளது.

இருப்பினும், மடகஸ்கார், டோகோ, மொராக்கோ மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் சாதித்துள்ளதாக யுனெஸ்கோ பாராட்டியுள்ளது.
2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யுனெஸ்கோ தலைவர் காலித் எல்-எனானி (Khaled El-Enany) வலியுறுத்தியுள்ளார்.