இலங்கையில் அணு மின்உற்பத்தி நிலையத்தை அமைக்கும் ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையின் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சி செய்துவருவதான தகவல் பாதுகாப்பு சார்ந்த கரிசனைகளுக்கு வழிகோலியுள்ளது.
இந்த நிலையில் அணுசக்தி மின் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்கும் ரஷ்யா, அணுக்கழிவுகளையும் திரும்பப் பெறவும் இணங்கியுள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.
அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது.
சிறிய அணு உலைகள்
எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பூர்த்தி செய்யும் நம்பகமான, குறைந்த கார்பன் வெளியேற்றத்தை கொண்ட மின்சார உற்பத்தி மூலமாக அணுசக்தி உள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா தெரிவித்துள்ளார்.
கடற்கரைக்கு அப்பால் அல்லது கடற்பகுதியில் 100 மெகா வொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட சிறிய அணு உலைகள் நிர்மாணிக்கப்படலாம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் கூறியுள்ளார்.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவுடன் இந்த திட்டம் அடுத்த கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தகுதி பெறும் என எஸ்.ஆர்.டி. ரோசா குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி மின் உற்பத்தியாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் சுவட்டு எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம்
ரஷ்யாவினால் இந்த அணுமின் உற்பத்தி திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் ரஷ்ய அரசிடம் உள்ளது எனவும் பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா தெரிவித்துள்ளார்.
அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை கண்டறியும் சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது எனவும் மிதக்கும் மின்நிலையத்திற்கே முதல் முன்னரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சமுதாயத்தின் செயல்பாட்டிற்கு மின்சாரம் இன்றியமையாதது என கூறியுள்ளதுடன், அணு மின்சாரத்தின் நிலையான உற்பத்தியானது, மின்சார பற்றாக்குறை மற்றும் செயலிழப்புகளைத் தவிர்க்க உதவும் எனவும் பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையானது, தனது மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பன்முகப்படுத்துவதற்கும் முயற்சி செய்துவருகின்றது.
2050 ஆம் ஆண்டளவில் மின்சாரத் துறையில் கார்பன் வெளியேற்றத்தில் நடுநிலைமையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், நம்பகமான மற்றும் குறைந்த கார்பனை வெளியேற்றும் தெரிவாக அணுசக்தியை கருதுவதாகவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.