அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை
அரசாங்கம் பணம் கொடுத்து யார் மீதும் சேறு பூசுவதில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக குரல் கொடுக்கும் குழுக்களைத் தடுக்கும் சக்தி தமக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்காகச் சமூக ஊடகங்களில் தன்னார்வமாக முன்வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அரசாங்கம் எவரையும் அவ்வாறு செய்யுமாறு கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்தின் சார்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவேரை மதிப்பதாகவும் பாராட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் பணத்திற்காக எழுதுபவர்களோ, கூலிக்குச் சேறுபூசுபவர்களோ அல்லது பணத்திற்காகக் கருத்துகளைப் பதிவிடுபவர்களோ அல்லர். தமது இயக்கத்திற்காகத் தன்னார்வமாக முன்வரும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தன்னார்வமாக உழைக்கும் இத்தகைய படைகள் தானாகவே உருவாகின்றன எனவும் இவ்வாறான படைகளே முற்போக்கு மக்கள் இயக்கங்களைப் பாதுகாக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
பிற எந்தவொரு சக்தியையும் விட, முற்போக்கு மக்கள் இயக்கங்கள் மூலம் தானாகவே உருவாகும் பரந்த மக்கள் சக்தியே மிகவும் வலிமையானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய சக்தி உருவாகுவது நல்லதே தவிர, அதைத் தடுக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.