என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரம்: பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய கொன்ஸ்டபிள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி பல்வேறு ஊடக நிறுவனங்களுக்கு அறிக்கைகளை அளித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிளைத் தாக்கி அவரது மோட்டார் சைக்கிளைத் திருடியதாகக் கூறப்படும் நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இருப்பினும், அந்த அதிகாரி அளித்த முறைப்பாடு குறித்து, பொலிஸ் தரப்பு எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற கூற்றுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகள்
இந்த நிலையில், குறித்த பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி கொலன்னா பொலிஸில் அளித்த முறைப்பாடுகள் தொடர்பாக கொலன்ன பொலிஸ் நிலையம் மற்றும் எம்பிலிபிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தற்போது மேலும் விசாரணைகளை நடத்தி வருவதாக, பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சம்பவம் நடந்த இரவில், கொலன்ன பொலிஸ் நிலையத்தின் நடமாடும் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொன்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து காவலில் எடுக்கப்பட்டது. பொலிஸ் கொன்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் இரண்டு நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக, எம்பிலிபிட்டிய மருத்துவமனையின் பொலிஸ் பிரிவு அந்த அதிகாரிக்கு மருத்துவ - சட்டப் பரிசோதனை படிவத்தை வழங்கியுள்ளது.
எம்பிலிபிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் வசிக்கும் மூன்று குடியிருப்பாளர்களிடமிருந்தும், காயமடைந்த அதிகாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நபர் உட்பட பத்து நபர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது, அத்துடன் வீட்டு உரிமையாளரிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.