ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அராசங்கத்திற்கு தெரியும்..! நாடாளுமன்றில் தகவல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநிர்வாக, உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரட்ன இந்த விடயத்தை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் பிழையான பிரசாரங்களை அரசாங்கம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்ப முயற்சி
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் பொய்யுரைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலின் மெய்யான பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து தமக்கு போதியளவு தெளிவு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இந்த தாக்குதல்கள் தொடர்பிலான பிரதான சூத்திரதாரிகள் குறித்து நூல் ஒன்றை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் தலைவர்கள் இணைந்து கொண்டதாகவும் இதன் மூலம் அந்த நூலின் உள்ளடக்கத்தை அவர்கள் எற்றுக் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் மக்களை திசை திருப்ப முயற்சித்த போதிலும் உண்மைகளை மூடிமறைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இளைஞர் சமூகத்தின் தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யக் கூடிய வகையிலான திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.