நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது
நாடடி்ன் அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளினால் அரசியல் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை மீறும் வகையிலான நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆனந்த பாலிதவை சிறையில் பார்வையிட்டு திரும்பும் போது ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு முயற்சிக்கும் போது ஒலிவாங்கி நிறுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் லாஃப் எரிவாயு விலையேற்றம் தொடர்பில் குரல் எழுப்ப முயற்சித்த போது அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் முனைப்புக்களினால் அரசாங்கத்திற்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.