நாடாளுமன்றத்தின் புதிய சட்டமுன்வரைவு குறித்து வழக்கு தாக்கல்: தேசிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார மாற்றம் தொடர்பான சட்ட முன்வரைவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"நாட்டின் பொது நிதி முகாமைத்துவத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்காக பொருளாதார மாற்ற சட்டமூலம் மற்றும் "பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம்" என்பன அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
முதலீட்டுச் சபை
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில், பாரதூரமான சட்டமூலமொன்றை முன்வைத்துள்ளது.
மேலும், அந்த சட்டமூலத்தில் முதலீட்டுச் சபையை இல்லாதொழிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.
இந்நிலையில், வணிகர் சங்கங்களிடமிருந்தோ, தொழிலதிபர்கள் சங்கங்களிடமிருந்தோ அல்லது தனியார் துறையில் உள்ள எவரிடமிருந்தோ அத்தகைய செயலுக்கான கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் அரசாங்கம் இந்த சட்டமூலம் குறித்த நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரும் இணைந்து அதற்கு எதிராக செயல்படுவோம்.
மேலும், தொழிற்சங்கத்துடன் விவாதித்து, அதற்கு எதிராக சிறந்த தலையீடுகளை செய்வேன்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |