கோட்டாபய அரசின் கல்விக் கொள்கையை முன்னெடுக்கும் அநுர : எழும் குற்றச்சாட்டு
கடந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கல்விக்கொள்கையை எதுவித மாற்றமுமின்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்விக் கொள்கை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கல்விக் கொள்கையில் மறுசீரமைப்பு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், உண்மையில் தற்போதைய கல்விக் கொள்கை தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை தொடர்பான நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

தேசிய மக்கள் அரசாங்கம் முன்னெடுக்கும் கல்விக் கொள்கை, கடந்த 2019ம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்விக் கொள்கையாகும். அதில் எதுவித மாற்றமுமின்றி இந்த அரசாங்கம் அதனை முன்னெடுத்துள்ளது.
அதே போன்று தற்போதைய கல்விக் கொள்கை குறித்து இதுவரை எதுவித உத்தியோகபூர்வ ஆவணங்களையும் அரசாங்கம் வெளியிடவில்லை.
எதிர்வரும் ஆண்டில் வெளியிடும் சாத்தியப்பாடுகளையும் காணமுடியவில்லை. கல்விக் கொள்கையில் மறுசீரமைப்பொன்றை மேற்கொள்ளும்போது முதலில் அது குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் கலந்துரையாடலுக்குப் பதிலாக கல்வி மறுசீரமைப்பு குறித்து பாடம் எடுக்கின்றார்.
முன்னோடித் திட்டம்
கல்வி மறுசீரமைப்பொன்றை முன்னெடுப்பதாயின் அது தொடர்பான பரீட்சார்த்த திட்டமொன்றை ஓரிடத்தில் செயற்படுத்தி அதன் பலாபலன்களைக் பொறுத்தே அதனை நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்த வேண்டும்.

கடந்த 1997ம் ஆண்டின் கல்வி மறுசீரமைப்புக் கொள்கை கம்பஹா மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்பட்டு, அதன் பின்னரே நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு பரீட்சார்த்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |