கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பயணிப்போருக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதியை, மழைக்காலங்களில் பயன்படுத்தும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுக்கும் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பகட்ட ஆய்வுகள்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இன்று (27) பஹல கடுகண்ணாவை பகுதியின் நிலையை நேரில் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி, தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹல கடுகண்ணாவை பகுதியில் மண்சரிவினால் வீதிக்கு ஏற்பட்ட சேதங்களைக் குறைப்பதற்கான பொறியியல் முறைகளை வடிவமைப்பதற்குத் தேவையான ஆரம்பகட்ட ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிவித்தல்
மேலும், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அபாயகரமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நில அளவைப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கியமாக, நிலையற்ற நிலையில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கும், கற்பாறைகளுக்கு மேல் உள்ள மண் அடுக்குகள் சரிந்து வீழ்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைத் தயாரிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
வீதியின் கீழ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உறுதித்தன்மையற்ற நிலையைச் சீர்செய்யப் பக்கச்சுவர்களை அமைத்துப் பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளை விரைவுபடுத்தி, வீதியைப் பயன்படுத்தும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.