சாரதி அனுமதி பத்திரத்திற்கு காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நெருக்கடி நிலைமையின் போது தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதி பத்திரங்களுக்கு பதிலாக புதிய அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்காக சாரதி அனுமதி பத்திரம் வழங்குவதற்காக 8 இலட்சம் உரிம அட்டைகள் பெறப்பட்டுள்ளதாகவும், 2 இலட்சத்து 40 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதி பத்திரங்கள்
எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள், சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடப்பட்டு, தற்காலிக ஓட்டுநர் உரிமங்களுக்குப் பதிலாக தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாததால், சுமார் 4 1/2 லட்சம் பேருக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று வரையிலான காலப்பகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார்.
மாதமொன்றுக்கு சுமார் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் புதிய சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடப்படுவதாகவும், சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டதால், மீண்டும் அட்டை நெருக்கடி ஏற்படாது எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.