சனத் நிஷாந்தவை எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு
இரண்டு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட, இரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மனு தாக்கல்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக அரசியலமைப்பு விதிகளின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக விஜித குமார மற்றும் பிரியலால் சிறிசேன ஆகிய சட்டத்தரணிகள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மனுக்களை விசாரணை செய்து வருகிறது.
சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சனத் நிஷாந்த
20222ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சனத் நிஷாந்த சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் 2022 ஆகஸ்ட் 23 அன்று, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை குறித்து, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பாக சில அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கும், நீதித்துறை உறுப்பினர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக, அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே அரசியலமைப்பின் 105(3) சரத்தின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள், தமது மனுக்கள் ஊடாக கோரியுள்ளனர்.