இலங்கைக்கான நிதியுதவியில் நிச்சயமற்றதன்மை:சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் டிசம்பரில் சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்பின் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்வதில் இன்னும் நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
நிச்சயமற்றதன்மை
இலங்கை அரசாங்கம்,எதிர்வரும் டிசம்பரில் இந்த பிணை எடுப்பை எதிர்பார்க்கிறது. எனினும் இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கியுள்ள பலதரப்பு கடன் வழங்குபவர்களின் முடிவுகளே டிசம்பர் என்ற வரையறையை தீர்மானிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய டிசம்பர் என்ற காலக்கெடு நிச்சயமற்றதாகவே உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான பேச்சுவார்த்தை குழுவின் சிரேஸ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் குழுவின் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
கடன் நிவாரண விவாதங்கள்
கடன் நிவாரண விவாதங்கள் நடைபெறுகின்ற நிலையில், இந்தக் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைந்து
செயற்பட்டால், இலங்கை நெருக்கடியிலிருந்து கூடிய விரைவில் மீள முடியும் என்று
அவர்கள் தெரிவித்துள்ளனர்.