வடக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக நோர்வே தூதுவர் உறுதி
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர், இன்று (06.05.2024) வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை மேம்படுத்தல்
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நோர்வே தூதுவர் உறுதி
கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர் மற்றும் யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |