வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்
வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 1823 குடும்பங்களை சேர்ந்த 6301 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 69 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா
நேற்று (27.11) மாலை வரை இடம்பெற்ற பாதிப்புகளை அடிப்படையாக கொண்டே பாதிக்கப்பட்டோரின் தகவல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தொடர்ந்து பெய்து வரும் மழையினால், வெள்ள நீர் வழிந்தோடாமையால் பாதிப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 775 குடும்பங்களைச் சேர்ந்த 2709 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 11 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 11 குளங்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், ஏ9 வீதி உட்பட சில வீதிப் போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம்
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெய்த தொடர் மழையால் அனைத்து இடங்களிலும் வெள்ளம் வழிந்தோடாமல் காணப்படும் நிலை காணப்படுகின்றது.
யாழ் நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உதயபுரம் கிராமத்தில் வாழும் 200-க்கும் மேற்பட்ட கடல் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் மழை வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த ஒரு சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இக்கிராமத்தில் வாழும் கடல் தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.
இதனால் கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இக்கிராம மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
தென்மராட்சி பிரதேசம்
யாழ்.குடாநாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தென்மராட்சி பிரதேசத்தின் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்களப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் முழ்கியுள்ளன.
மேலும், குடியிருப்புகளில் வெள்ளம் உட்புகுந்துள்ளது. வெள்ளத்தால், சரசாலை, மட்டுவில், மிருசுவில், கொடிகாமம், அல்லாரை, கைதடி, நாவற்குழி ஆகிய பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம உதவி
வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் -சங்கிலியன் தோப்பு, மற்றும் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் 350 பேருக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் சமைத்த உணவுப் பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.
இதனை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
மன்னார்
மன்னார் (Mannar) மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நேற்று புதன்கிழமை (27) மாலை 6 மணி வரை 16 ஆயிரத்து 774 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 674 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு (DMC) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் 73 தாற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களில் 2 ஆயிரத்து 845 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 156 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லலைத்தீவு
முள்ளியவளை பகுதியில் மரம் முறிந்து வீட்டு கூரைக்கு மேல் விழுந்ததால் வீட்டு மேற்பக்க கூரை முற்றாக சேதமடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவரும் நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட முள்ளியவளை 1ஆம் வட்டாரம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றையதினம் அதிகாலை வீட்டின் பெரிய மரம் முறித்து விழுந்துள்ளது.
அதனையடுத்து வீட்டின் மேற்பக்க கூரை முற்றுமுழுதாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தின்போது வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படகிறது.
இளங்குமரன் கலந்துரையாடல்
யாழ். மாவட்டத்தில் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடனும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன்,
"தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு வடிகால்கள் சிறந்த நிலையில் இல்லாமைதான் காரணமாகும்.
நாம் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களைப் புத்திஜீவிகளுடன் நேரடியாகச் சென்று ஆராய்ந்து வருகின்றோம்.
குறிப்பாக யாழ். நல்லூர் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் முறையான வடிகாலமைப்புக் கட்டமைப்புச் செயற்பாடுகள் இல்லாமையால்தான் அந்தப் பகுதிகள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |