யாழ்ப்பாணத்தில் வட மாகாண சட்ட உச்சிமாநாடு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கங்களின் ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்ட வட மாகாண சட்ட உச்சிமாநாடு 2026 நேற்றைய தினம் (28.11.2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
வரவேற்புரை
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய சிறப்புரையாற்றியதுடன், சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் சட்டத்தரணி என்.பார்த்தீபன் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.

மாநாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல், நோட்டரி சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழில்முறை ஒழுக்கநெறிகள், தேசவழமைச் சட்டத்தின் கீழான உரிமை மாற்ற உத்தரவுகள், வெளியேற்றம் மற்றும் காலவரையறைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்ட விடயங்கள் தொடர்பான அமர்வுகள் இடம்பெற்றன.
சட்ட நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்
அத்துடன், உயர் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்கள் மற்றும் வழக்கு விசாரணைக்கு முந்திய சட்ட நடைமுறைகள் தொடர்பான குழுநிலை கலந்துரையாடலும் நடைபெற்றது.
சிரேஷ்ட சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்துறை வல்லுநர்கள் வளவாளர்களாகப் பங்கேற்ற இம்மாநாடு, வட மாகாண சட்டத்துறையினரிடையே சட்ட அறிவுப் பரிமாற்றம் மற்றும் தொழில்சார் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, வட மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்துறையினருக்கான இத்தகைய மாநாடு யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
