கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடி
இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் 'கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்' (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்' அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதான மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் கண் சத்திர சிகிச்சைப் பிரிவில் வட மாகாணம் இன்று புதியதொரு பரிணாமத்தை எட்டியுள்ளது.
இலங்கையிலேயே வட மாகாணத்தில் மட்டும்தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 'பூச்சிய' நிலையில் உள்ளது.
எமது மாகாணத்தின் இந்தச் சிறந்த சேவையினால் கவரப்பட்டு, ஏனைய மாகாணங்களில் இருந்துகூட மக்கள் இங்கு வந்து சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு செல்கின்றனர். இது எமது மாகாணத்துக்குக் கிடைத்த கௌரவமாகும்” என்றார்.