அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் அதிருப்தி
அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன்.
அசமந்த போக்கு
நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகிறேன்.

ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?.
எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்.
இங்கே பழிவாங்குவதற்குத் தரும் முக்கியத்துவத்தை, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.



