லஞ்ச ஊழலுக்கு அநுர அரசாங்கத்தில் இடமில்லை: வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியில் யாருடனும் இரகசியக் கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. எனவே, ஊழலை ஒழிப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று(26.01.2026)இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லஞ்சம் கொடுப்பது தவறு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து எங்கள் சேவைகள் அமையக் கூடாது.
நேர்மையின்றிய தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது. மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப் பிணைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி மன்றங்களாகும்.
எனவே, இந்த பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான தெளிவான அறிவு அவசியம். சில சந்தர்ப்பங்களில் “அன்பளிப்பு" என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்கள் கூட இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
செயற்றிட்டம் முன்னெடுப்பு
கட்டட அனுமதி, வியாபார அனுமதி, சோலை வரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனடியாகச் செய்து கொடுக்க முடியும். ஆனால், சில இடங்களில் இவை வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய இழுத்தடிப்புக்கள் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் செய்யப்படுவதாகவே கருதப்படும்.
இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை. கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்வதற்கு நீங்கள் தூண்டப்பட்டிருக்கலாம்.
ஆனால் தற்போதைய அரசின் காலத்தில் அவ்வாறான எந்தவொரு விடயங்களும் நடைபெறப்போவதில்லை. எனவே, உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மூன்று நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ள இந்தச் செயற்றிட்டத்தின் முதல் நாளான இன்று, யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் (வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு, காரைநகர், ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை) தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam