யாழ். தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க நடவடிக்கை
சுமார் 18 வருடங்களாக புனரமைக்கப்படாத யாழ்ப்பாணம், கொடிகாமம் - தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்க வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராம மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கைக்கு அமைய, சுமார் 2.34 கிலோமீட்டர் வீதியை புனரமைப்பு செய்வது தொடர்பில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
மதிப்பீட்டு பணிகள்
அதற்கமைய, சாவகச்சேரி பிரதேச சபையினால் வீதி புனரமைப்பிற்கான மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை முழுமையாக புனரமைக்க 42 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து மில்லியன் ரூபா நிதி சாவகச்சேரி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில் முழு வீதியும் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு பணி
முழுமையான நிதி கிடைக்காத பட்சத்தில் சாவகச்சேரி பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் குறித்த வீதி பகுதியளவில் புனரமைக்கப்படும் என வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் கூறியுள்ளார்.
தட்டாங்குளம் பிள்ளையார் வீதியானது ஜே-320 மற்றும் ஜே-321 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் இடைப்பட்ட வீதியாக காணப்படுவதால் இந்த இரண்டு பகுதி மக்களும் வீதியை பயன்படுத்துகின்றனர்.
அத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்களும் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர். குன்றும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த வீதியானது மழைக் காலங்களில் வெள்ளத்தால் மூடப்படும் என கிராம மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இதனால் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கொடிகாமம், மீசாலை வடக்கு இராமாவில் கிராம மக்கள், வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
