இனியும் பொறுமை காக்க மாட்டேன்! வடக்கு ஆளுநர் எச்சரிக்கை
பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில் இதுவரை தீர்வுகள் முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும் பொறுமை காக்க மாட்டேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஆளுநர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சர்கள் மாற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சுக்கள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு
அமைச்சர்கள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திகரமாக பெற்றுக் கொள்ளாமை மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் பல முறைப்பாடுகள் நேரடியாக கிடைக்கப்பெற்றன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சிலவற்றுக்கு இதுவரை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அரச சுற்று நிருபங்களுக்கு அமைவாக முறைப்பாடு வழங்கும் நபர் ஒருவருக்கு உரிய காலப் பகுதியில் தீர்வை முன்வைக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.
முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு முன்வைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை
அரச நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை இலகுபடுத்துவதற்காக கட்டியமைக்கப்பட்ட ஸ்தாபன அமைப்பாக காணப்படுகின்ற நிலையில் அதன் ஊடாக பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் போதே குறித்த ஸ்தாபனம் மக்களின் நம்பிக்கையை வென்றதாக அமையும்.
வட மாகாணத்தில் செயற்பாடின்றி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் எந்த ஒரு நிர்வாக கட்டமைப்பையும் ஆளுநர் என்ற நீதியில் அனுமதிக்கப் போவதில்லை.
ஆகவே தான் வடக்கு மாகாணத்தில் இதுவரை அமைச்சுகள் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு முன் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் எனவும் ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
