வடக்கு ஆளுநரின் அழுத்தம்:மாற்றீடு இன்றி இடமாற்றப்படும் சுகாதார பணியாளர்கள்
பதிலீடு இன்றி (Replacement)சுகாதார பணியாளர்கள் இடமாற்றப்படுவதனால் மக்களுக்கான சேவையினை நெருக்கடி இன்றி வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த தென்பகுதியை சேர்ந்த மருந்துக் கலவையாளர் ஒருவருக்கு மாற்றீடு இன்றி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேர்த்தியான சேவை வழங்குவதில் நெருக்கடி
ஐந்து மருந்தாளர்கள் கடமையாற்றி வருகின்ற வைத்தியசாலையில் இருவர் வெளிநோயாளர் பிரிவிலும், இருவர் மாதாந்த சாய்சாலை (கிளினிக்) பிரிவிலும், ஒருவர் விசேட சிகிச்சை பிரிவிலும் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் விடுமுறை எடுத்தாலும் நேர்த்தியான சேவையினை வழங்குவதில் வைத்தியசாலை நெருக்கடியினை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உரிய பதிலீடு (Replacement) இன்றி மருந்துக் கலவையாளர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் என்பன இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.
இதனால் கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கணிசமான பகுதிகளுக்கும் சேவையினை வழங்கி வருகின்ற, நாளாந்தம் அதிகளவான வெளிநோயாளர்கள் மற்றும் மாதாந்த சிகிச்சை நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்ற மருத்துவமைனையின் சேவைகளை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாற்றீடு இன்றிய இடமாற்றம்
இந்த முறையற்ற இடமாற்ற உத்தரவினை வடக்கு மாகாண ஆளுநரின் கடும் அழுத்தம் காரணமாகவே சுகாதாரதுறை உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி உரிய மாற்றீடு இன்றிய இடமாற்றத்தை வழங்குவதற்கு மாகாண மட்ட உயரதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இதனால் மாகாண மட்ட உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள மாவட்ட மட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி பணியாளர்களை விடுவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.
மோகநாதனை தொடர்புகொள்ள அவரது அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு பல
தடவைகள் அழைத்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை



