மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் தலைமையிலான விசேட குழுவினர் விஜயம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையிலான விசேட குழுவினர் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குழுவினர் இன்றையதினம்(8) விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, வைத்தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கலந்துரையாடல்
குறிப்பாக தேவைகள் மற்றும் வைத்தியசாலையில் உள்ள அதிகமான கட்டிடங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்களாக உள்ளமையினால் அவற்றை மாற்றி அமைத்தல்,மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
மேலும் நோயாளிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள்,அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது இந்திய அரசின் நிதி உதவியுடன் வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள கட்டிடம் குறித்தும் ஆளுநர் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
மேலும் மாகாண நிதியில் இருந்து திட்டம் ஒன்றை வகுத்து 2026 ஆம் ஆண்டுக்கான நிதியில் இருந்து 3 மாடி கட்டிடம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கவும் கலந்துரையாடப்பட்டது.
துரித நடவடிக்கை
மேலும் அடுத்த வருட நிதியில் இருந்து சீ.டி.ஸ்.கேன் இயந்திரம் ஒன்றையும், மேலும் சில உபகரணங்கள் கொள்வனவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் வைத்தியர்களுக்கான விடுதி , வைத்தியசாலைக்கான ஆளணி உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் மன்னாரில் காற்றாலை செயல்திட்டம் குறித்து ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் வழங்கினார்.
காற்றாலை விடயம்
காற்றாலை விடயம் பேசி தீர்க்கப்பட வேண்டும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்று கலந்துரையாட பட வேண்டும். எங்களுக்கு என்ன தேவைகள் உள்ளது என்பது குறித்து கலந்துரையாட முடியும்.
எனவே கலந்துரையாடல் மூலம் இப்பிரச்சினைக்கான முடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,உதவி பிராந்திய சேவைகள் பணிப்பாளர், ஆகியோர் கலந்து கொண்டதோடு,வடமாகாண ஆளுநருடன் வடமாகாண பிரதம செயலாளர்,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,வடமாகாண கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








