கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது:வடக்கு ஆளுநர்
எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.08.2025) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் அந்தந்த வலயக் கல்விப் பணிபாளர்களே பொறுப்பானவர்கள்.
உரிய விசாரணைகள்
வலயங்களில் காணப்படும் பாடசாலை அதிபர்களின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் இருந்தால் அவர்களை மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் நன்றாக, அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் அதிபர்களை பாராட்ட வேண்டிய பொறுப்பும் கடப்பாடு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு உள்ளது.
தமது கடமைகளை சரிவரச் செய்யாதவர்களை எச்சரித்து அதன் பின்னரும் அவர்கள் ஒழுங்காக செயற்படத் தவறினால் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலைகளின் வளர்ச்சி அந்தந்த பாடசாலையின் அதிபரையே சாரும். எனவே அந்தந்த சமூகத்துக்கு உரிய பொறுப்புக்களை அந்தந்த பாடசாலை அதிபர்களே ஏற்க வேண்டும்.
ஒவ்வொரு வலியக் கல்வி பணிப்பாளர்களும் அடிக்கடி பாடசாலைகளுக்கு களப் பயணம் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செல்லுகின்ற பொழுது அங்கே காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் வளப் பங்கீடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எதிராக நடவடிக்கை
அத்துடன் ஆசிரியர்கள் சில பாடசாலைகளில் தேவைக்கு மேலதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேவை உள்ள பாடசாலைகளுக்கு உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.
வளப் பங்கீடுகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்களே பொறுப்பு. தங்களின் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றாத வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், கலாசார அலுவல்கள் பிரிவு என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







