மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு- கிழக்கு துணை நிற்கும்! சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
வடக்கு - கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, அண்மையில் முழு நாட்டையும் புறட்டிப் போட்ட டித்வா சூறாவளி, மலையகத்தை வழக்கம் போலவே சூறையாடிச் சென்றுள்ளது.
நாளைய விடியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கனவுகளுடனும் இருந்த ஏராளமானோரை நொடிப்பொழுதில் காவுகொண்டு மண்ணுக்கடியில் புதைத்தது. உறவுகள் இருக்கின்றார்களா? அவர்கள் நலமுடன் இருப்பார்களா என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் நிலைக்கும் இயற்கை அந்த மக்களை வஞ்சித்துள்ளது.
டித்வா சூறாவளி
இலங்கையில் தமிழனாக இருப்பவர்கள் அனைவரும் துன்பப்படத்தான் வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு இம்முறை மலையகத் தமிழர்களையும் வடக்கு - கிழக்கு தமிழர்களையும் டித்வா புரட்டிப் போட்டுள்ளது.
இந்த டித்வா சூறாவளியால் மலையகத்தில் எழுநூறுக்கும் மேலான மக்கள் நிலச்சரிவுகளில் அகப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டு இறந்துள்ளனர். முன்னரும்கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் இப்பொழுது இது மிகவும் பாரதூரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்குப் பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட உறவுகள் 250 வருடங்களாக சொந்த நிலமின்றி, சொந்த வீடின்றி, அல்லலுறும் நிலையையே இதுவரை நாங்கள் பார்த்து வருகின்றோம்.
இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் இனப்படுகொலைகளின்பொழுது மலையகத் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு புகலிடம் தேடி வடக்கு - கிழக்கில் குடியேறியுள்ளனர்.
1977, 1981 மற்றும் 1983 காலப்பகுதிகளில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு - கிழக்கில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறியுள்ளனர்.
அவர்கள் இன்று தங்களுக்கான காணிகளுடனும் வீடுகளுடனும் இருப்பதுடன் கல்வியிலும் மேம்பட்டு தம்மைத் தாமே கவனித்துக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர்.
அரசாங்கம்
இலங்கை சுதந்திரமடைந்த உடன் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தினூடாக, ஒருபகுதி மக்கள் இந்தியா சென்றுவிட மறுபகுதியினர் இலங்கையில் தங்கினர்.
அவ்வாறு இலங்கையில் இருந்தவர்களுக்குக்கூட முழுமையான வாக்குரிமை மற்றும் குடியுரிமையைக் கொடுக்க இலங்கை அரசுகள் மறுதலித்தே வந்தன.

1985ஆம் ஆண்டு, இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெற்ற திம்பு பேச்சின்போது, தமிழர் தரப்பினர் நான்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தனர். அதில் ஒன்று இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் வாக்குரிமை, குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இதன் பின்னர், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் பேசி, அம்மக்களுக்கான வாக்குரிமை, குடியுரிமை என்பன வழங்கப்பட்டன. ஆனால், இன்றும் அவர்களில் பெரும்பாலானோர் காணி உரிமை அற்றவர்களாகவும் எவ்வித முன்னேற்றமும் அற்றவர்களாகவும் தேயிலைத் தோட்டத்தின் லயன்களில் வசிப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.
இந்தப் பின்னணியில் இயற்கை அனர்த்தங்களால் அந்த மக்கள் தொடர்ச்சியாக தமது உயிரை அர்ப்பணித்து வருவதானது, ஏற்புடைய விடயமல்ல.
ஆகவே, எமது பெருந்தோட்ட உறவுகளுக்கு இலங்கை அரசாங்கம், மலையகத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களை வழங்கி, இயற்கை அனர்த்தத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் வடக்கு - கிழக்கில் அந்த மக்கள் குடியேறி வாழ விரும்புகின்ற சூழ்நிலையில், அதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கத் தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.
புலம்பெயர்தல்
முன்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களின்பொழுதும் வடக்கு - கிழக்குக்குத் துறத்தப்பட்ட எமது உறவுகளை வரவேற்று உபசரித்து அவர்கள் அச்சமின்றி வாழக்கூடிய அடிப்படையில் காணிகளை வழங்கி, தேவையான உதவிகள் செய்யப்பட்டு, அவர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.
அரசு எவ்வித உதவியையும் செய்யாமலேயே தமிழ்த் தொண்டு நிறுவனங்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
[WY3IBI]
மலையக உறவுகள் வடக்கு - கிழக்கில் குடியேற விரும்பும் பட்சத்தில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் காணிகளை மட்டுமன்றி, அவர்களின் தேவையின் அடிப்படையில் காணிகளை வழங்கி, அவர்கள் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் மகத்துவமானது. மலையக மக்கள் வடக்கு - கிழக்கில் குடியேறுவது புதியதுமல்ல. அவர்களுக்கு இந்தப் பிரதேசம் அந்நியமானதுமல்ல.
இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளின் காரணமாகவே மலையக மக்கள் புலம்பெயர்ந்து வடக்கு - கிழக்குக்கு வந்தார்கள். போர் காரணமாக வடக்கு - கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.
, புலம்பெயர்தல் என்பது வடக்கு - கிழக்கிலும் மலையகத்திலும் நடைபெற்றுக்கொண்டே வந்துள்ளது. இப்பொழுது இயற்கை அனர்த்தம் அவர்களைப் புலம்பெயரச் செய்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்க அரசு தவறினால் அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் வடக்கு - கிழக்கு முன்னிற்கும்." - என்றுள்ளது.
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam