வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை (Video)
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் நாட்டின் பல இடங்களில் இன்று (29) கவனயீர்ப்பு போராங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்தவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடன் விடுவிக்கவும் கோரி, பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பாளர்கள் போராங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார்
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று (29) இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது.
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மன்னாரில் இடம் பெற்றுள்ளது. இதன் போது வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
”அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தாக்குவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
போராட்டத்தின் வெற்றி
இலங்கையின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள் ஜனநாயகமான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் சர்வாதிகார ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து இலங்கைத்தீவின் மக்கள் எனும் வகையில் நாம் பெருமிதமடைகிறோம்.
தமிழின அழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாத பாதுகாவலர்களான ராஜபக்சர்களை மண்டியிட செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.
முழு நாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தது. எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார மாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள், அதே மக்களுக்கு எதிராக திரும்பி மக்களின் குரலை நசுக்குவது சந்தர்ப்பவாதமாகும்.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்கு கொண்டு செல்லும்.
அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை
மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மீறப்படுதல் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் என அணைவரும் ஒன்றிணைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடன் விடுவிக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர.
யாழ்ப்பாணம்
இதேவேளை, யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கஜிந்தன்



