வடக்கு, கிழக்கு ஆயர் மன்றத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலியுறுத்தல்
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு ஆயர் மன்றம் தமது முடிவை பரிசீலனை செய்து அறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அதன் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும்.
இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல தமிழின் விடுதலைக்காக வித்தாகிப் போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல தமிழ் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும்.
எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறு நாட்களை குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவது என்பது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ஆம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூருவதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில் தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப் போன மாவீரர்களின் வாரத்தை நவம்பர் 21 - 27 திகதிவரை நினைவிருத்தும் வகையிலும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எனவே ஆயர் மன்றமானது தமது முடிவை பரிசீலனை செய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.