கோட்டாபயவால் பதவி பறிக்கப்பட்ட அதிகாரியைக் கொண்டே காய் நகர்த்தும் அநுர தரப்பு! பல சூழ்ச்சிகள் அம்பலம்
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்றைய(24.09.2026) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த கால தேர்தல்களின் போது நாங்கள் முன்வைத்த வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைவாகவே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.
கோட்டாபய அரசாங்கத்தின் அநீதிகள்
நீதித்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கைகைளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் திணைக்களம் உள்ளிட்டவற்றிலும் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த கட்டமைப்பின் முக்கியமான நிறுவனமாகும். அதனை நாங்கள் வலுப்படுத்தியிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர், சிஐடிக்குள் இருந்த, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பல அதிகாரிகள் அந்த வருடத்தின் நவம்பர் மாத இறுதிக்குள் உடனடியாக சிஐடியில் இருந்த இடமாற்றம் செய்யப்பட்டதுடன், அந்தப் பிரிவில் இருந்து பலர் நீக்கப்பட்டனர்.
உயர் பதவியில் இருந்த அதிகாரிகளான, தம்மிக பிரியந்த, வெதசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும், பெண் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் உள்ளடங்களாக மொத்தம் 22 பேர் அப்போது சிஐடியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இப்படித்தான் அந்த அரசாங்கம் குற்றப் புலனாய்வுத் துறைக்குள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தியது.

அதேபோன்று, ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து எந்தவொரு காரணமும் இன்றி நீக்கியதுடன் சுமார் 10 மாதங்களும் 18 நாட்களும் தடுத்து வைத்திருந்தனர்.
இதன் காரணமாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் இடைநடுவில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறுதான் கடந்த காலத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் இவை அனைத்தையும் மாற்றியமைத்து, சிஐடியை மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.
சிஐடியில் இருந்து நீக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் திணைக்களத்திற்குள் உள்வாங்கியுள்ளோம். சிஐடியில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். தற்போது விசாரணைகள் வலுப்பெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
5 மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு! இலங்கையர்கள் குறித்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்