22ஆவது திருத்தம் தமிழர்களின் உரிமைகளை மேலும் முடக்கும்! சபையில் சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை
அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலேயே அமையும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.09.2026) நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்தது?
அவர் மேலும் உரையாற்றுகையில், நீதி என்பது சுதந்திரமானது, தலையீடு அற்றது என்பது கிரேக்கத்தில் உருவானது. ஆனால், இலங்கையில் நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்தது? கடந்த காலங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதித்துறை என்ன தீர்வு வழங்கியது?
திருகோணமலை - அல்லைக்கந்தளாயில் 154 விவசாயிகள் பொலிஸார் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டபோது நீதித்துறை என்ன செய்தது?

அன்று நீதி காணப்பட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் பேரிடர் தடுக்கப்பட்டிருக்கும். மலையகத் தமிழர்கள் வெளியேற்றம், கொழும்பில் சொத்துகள் அழிப்பு, வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் மற்றும் திருகோணமலையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களில் நீதித்துறை மௌனம் காத்தது.
பிரான்சிஸ் அடிகளாரின் கண்கண்ட சாட்சியங்களுடன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களும், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களும் காணாமல் போனமைக்கு நீதித்துறையால் இன்றுவரை எதனையும் கண்டறிய முடியவில்லை.
நியாயமான சந்தேகம்
1978ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை இல்லாமல் செய்தபோதும், நீதித்துறையினால் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை.
ஏனைய துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்படாத நிலையில், நீதிபதிகளின் வயதெல்லையை மட்டும் அரசு அதிகரிப்பதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாமா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது.

குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, கன்னியா வெந்நீர் ஊற்று போன்ற இடங்களில் ஏனைய இனங்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு வேறு நீதி என்ற நிலையே காணப்படுகின்றது. மதத் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் என்பன எதிர்ப்புத் தெரிவித்து வரும் போதிலும், அரசு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் பின்னணி என்ன?
நிறுவனங்களின் சுயாதீனம், நீதித்துறை பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கம், அடிப்படை உரிமைகள் மற்றும் சட்ட உத்தரவாதம் இல்லாத சூழலில் கொண்டுவரப்படும் இந்த 22 ஆவது திருத்தத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி முற்றிலுமாக எதிர்க்கின்றது என்றார்.