இலங்கையில் பதிவாகும் 80 வீத மரணங்களுக்கான ஏது குறித்து வெளியான தகவல்
இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினாலேயே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களே முதன்மை பெறுகின்றன என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானப் பணிகளைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் இணைந்து செயற்படும்போது உடலில் பல கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதன் மிக மோசமான மற்றும் முக்கிய விளைவாகவே மாரடைப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானவர்களே நோயைச் சரியாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அதேபோன்று, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமான மிகக் குறைந்த அளவினரே நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.