இலங்கையில் 13000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி கிடையாது
இலங்கையில் 13,326 குடும்பங்களுக்கு இன்னும் முறையான கழிப்பறை வசதி இல்லை என என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கழிப்பறை வசதியின்றி வாழும் குடும்பங்கள், தங்கள் இயற்கை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக காடுகள் அல்லது கடற்கரை பகுதிகளை பயன்படுத்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 6,113,305 எனவும் இதில் 0.2% குடும்பங்களுக்கு (13,326 குடும்பங்கள்) சுகாதார தரநிலைகளுக்கு ஏற்ப எந்தவிதமான கழிப்பறை வசதியும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 92.2% குடும்பங்கள் தங்களுக்கென தனிப்பட்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன. 5.8% குடும்பங்கள் பலரும் இணைந்து ஒரு பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துகின்றன.
மேலும், 0.2% குடும்பங்கள் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் முழுவதும் பொது கழிப்பறை பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அதன் மொத்தம் எண்ணிக்க 4,518 குடும்பங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே மாவட்டத்தில் எந்தவிதமான கழிப்பறை வசதியும் இல்லாத குடும்பங்கள் 207 என பதிவாகியுள்ளன.
பல குடும்பங்கள் இணைந்து ஒரு கழிப்பறையைப் பயன்படுத்தும் வீடுகள் அதிகளவில் காணப்படுவது நுவரெலியா மாவட்டத்தில் என்று அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.